Sunday, October 9, 2016

Filled Under:

உத்தரபிரதேசத்தில் நவம்பரில் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா: தேர்தல் களம் சூடு பிடிக்கிறது

Priyanka starts campaigning in Uttar Pradesh in November: the election platform catches fire

மீரட்: உத்தரபிரதேசத்தில் நவம்பரில் பிரசாரத்தை தொடங்க பிரியங்கா திட்டமிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வர  உள்ளது. இதையொட்டி கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு எப்படியும் ஆட்சியை அமைத்தே தீருவது என்ற வேகத்துடன் காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை முடுக்கி  விட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி காங்கிரஸ் பல்வேறு பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறது. டெல்லியில்  இருந்து தொடங்கி உத்தரபிரதேசம் லக்னா வரையிலாக வடக்கு உத்தரபிரதேசத்தை குறிவைத்து பேருந்து பிரசாரத்தை குலாம் நபி ஆசாத்தும், ஷீலா தீட்சித்தும்  நடத்தி முடித்தனர்.

இதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 3500 கிமீ தொலைவுக்கு கிராமப்புறங்களை குறிவைத்து ராகுல் தனது கிசான் யாத்திரையை நடத்தி முடித்துள்ளார். அப்போது  அவர் விவசாயிகள், கிராம மக்களின் வீடுகளுக்கு நேரிலேயே சென்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்த தனது இரண்டாவது கட்ட  திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்ற உள்ளது. இதையொட்டி பல்வேறு தரப்பினராலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பிரியங்கா தனது பிரசாரத்தை தொடங்க  திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், பிரியங்கா தனது பிரசாரத்தை நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் தொடக்கத்தில்  தொடங்குவார் என தெரிகிறது. இதன் மூலம் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதுடன், தேர்தலையொட்டி சுமார் 150 இடங்களில் பிரசார பேரணிகளிலும்  பங்கேற்பார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ராகுலின் கிசான் யாத்திரை மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டுகளில் மக்கள்  மத்தியில் செய்த பிரசாரத்தில் தற்போதுதான் மிகப் பெரிய அளவில் ஒரு சாதகமான விளைவை நேரடியாக பார்க்க முடிந்தது. இந்த முறை தேர்தலில் காங்கிரஸ்  கட்சி தீவிரமாக செயல்படும். இருந்த போதிலும் இன்னும் கட்சி சார்பில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கான செயல் திட்டங்கள் எதுவும்  உருவாக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் பிரசாரம் எதுவும் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கவில்லை. அதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவில்  அலையை உருவாக்கி உள்ளது என்ற அச்சம் பாஜவுக்கு உள்ளது.

எனவே எங்களது பிரசார புயலான பிரியங்காவை தயார் நிலையில் வைத்துள்ளோம். அவர் பாஜவின் பிரசாரத்தை தகர்ப்பார். ஏறக்குறைய அவர் பிரசாரம் செய்வது  உறுதியாகி உள்ளது. சுமார் 150 கூட்டங்களில் பங்கேற்று பேசுவார். 2017ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் வரலாம் என தெரிகிறது. எனவே அவர் நவம்பர் இறுதியில்  அல்லது டிசம்பரில் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்றார். எனவே பிரியங்காவின் பிரசாரம் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அளவில்  பலமாக இருக்கும் என்பதால் அனைத்து தரப்பிலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment