தினம் ஒரு ஹதீஸ் -310
முஹர்ரம் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, ஃபிர்அவ்னின் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக வைக்கப்படுவதாகும். இது தான் இந்நோன்பை வைப்பதற்கான காரணம், ஆனால் சிலர் இந்நோன்பை ஏன் வைக்கிறோம் என்பதையே மறந்து வேறு காரணத்திற்காக வைக்கின்றனர், அதாவது ஈராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களின் பேரரான ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்கு துக்கம் அனுசரிக்கும் விதத்தில்இந்நோன்பை வைக்கின்றனர், நபி (ஸல்) அவர்கள் மரணித்து 51 வருடங்களுக்குப் பின் நடந்த ஒன்றிற்காக நபி (ஸல்) அவர்கள் எப்படி நோன்பு நோற்க கூறியிருப்பார்கள் என்பதைக் கூட இவர்கள் சிந்திப்பதில்லை. கர்பலா சம்பவத்திற்கும், ஆஷூரா நோன்பிற்கும் அணுவளவும் சம்பந்தமில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோன்பானது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, அதை அல்லாஹ்விடம் நன்மை எதிர்பார்த்து வைக்க வேண்டும், அதை விடுத்து அதை ஒரு மனிதருக்காக, அவரின் இறப்பிற்கான துக்க அனுசரிப்பாக வைப்பது ஷிர்க் ஆகும். மேலும், இறந்தவருக்காக 3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுசரிக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை (ஆதாரம்: புகாரி 313) எனும் போது 13 நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்திற்காக இன்று வரை துக்கம் அனுசரிப்பது நபிவழியையும் மீறிய செயல்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். (அம்மக்களிடம் அது பற்றிக் கேட்கப்பட்ட போது,) “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று அவர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
நூல்: புகாரி 3397
0 comments:
Post a Comment