சென்னை: முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாகாக்கள், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று இரவு அறிவித்தார். இலாகா இல்லாமல் ஜெயலலிதா முதல்வராக நீடிப்பார் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்பின்னர், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், நோய் எதிர்ப்பு மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனால் முதல்வர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதேநேரத்தில், முதல்வர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற
வேண்டியிருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், காவிரி போன்ற சிக்கலான விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்கவும், துணை முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து முதல்வரின் பொறுப்புக்களை மற்றொருவருக்கு வழங்குவது குறித்து அதிமுகவில் கடந்த சில நாட்களாக மேல்மட்ட அளவில் விவாதம் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், முதல்வர் ஜெயலலிதாவை இதுவரை யாரும் சந்திக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, அப்போலோ டாக்டர்கள் மட்டுமே, அவர் சிகிச்சை பெற்று வந்த அறைக்குள் செல்ல முடிந்தது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு வெளியே வரை சென்றனர். கண்ணாடிக்கு வெளியே நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
முதல்வரை யாரும் சந்திக்க முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவுவதால், தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மீண்டும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன. இந்தநிலையில், தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 166(3)வது விதியின் கீழ் தமிழக ஆளுநர் இந்த அறிவிப்புக்களை வெளியிடுகிறார். முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாகா பொறுப்புகள், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இனி அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறும். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கும் வரை இந்த ஏற்பாடு தொடரும். ஜெயலலிதா இலாகா இல்லாமல், முதல்வராக தொடர்ந்து நீடிப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா உள்துறை மற்றும் நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தார். இந்த துறைகளை இனிமேல், ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அவரிடம் ஏற்கனவே நிதித்துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம்...
அதிமுக 2001ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோது, வருவாய் துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். பின்னர், டான்சி வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனத்தை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அதனால் 2001 செப்டம்பர் 21ம் தேதி முதல் 2002 மார்ச் 1ம் தேதி வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பு வகித்தார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றவுடன், பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. சொத்து குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பரில் பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதால்
அதே மாதம் 29ம் தேதி 2வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். அவர் 2015 மே 22ம் தேதி வரை முதல்வராக நீடித்தார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்ததால் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். தற்போது செப்டம்பர் 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது முதல்வரின் இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் கூறுவது என்ன?
இந்திய அரசியலமைப்பு சட்டம் 166 (3)ன்படி, அரசு நிர்வாகம் எந்த தடங்கலும் இன்றி சீராக செயல்பட ஆளுநர் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அதே போல, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு, சூழ்நிலைக்கேற்ப, அமைச்சர்களின் இலாகாக்களையும் ஆளுநர் மாற்றலாம்.
* 1951 ஜனவரி 14ல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
* 1996 முதல் 2001 வரை பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்தார்.
* 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 வரை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.
* 2014 செப்டம்பர் 29 முதல் 2015 மே 22 வரை இரண்டாம் முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.
* 2016 அக்டோபர் 11 முதல் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து இலாகாக்கள் மற்றும் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் பொறுப்பையும் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment