Sunday, October 16, 2016

Filled Under:

கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ பேட்டி


மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என வைகோ தெரிவித்தார்.
கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: வைகோ பேட்டி
ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்துக்கு சோகமும், ஆபத்துகளும் சூழ்ந்து உள்ள காலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இல்லாத ஒரு ஆபத்து காவிரி உரிமை பிரச்சினையில் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீரும் தரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உதாசினப்படுத்தி உள்ளது.

மேகதாதுவில் அணைகட்டும் பணியை தொடங்க போவதாகவும் அறிவித்து உள்ளது. மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் அரசு இதை தடுக்காமல் ஓரவஞ்சகமாக செயல்பட்டு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. இதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என திட்டமிட்டு தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளதை மன்னிக்க முடியாது. நர்மதா அணையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தபோது பாராளுமன்றத்தில் அனுமதி எதுவும் பெறவில்லை.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், அரசியல் கட்சிகளும் சேர்ந்து மத்திய அரசை கண்டித்து 2 நாள் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தாக, தூண்டுதலாக மத்திய அரசு இருப்பதால் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை மத்திய அரசுக்கு உணர்த்துகின்ற வகையில் போராட்டங்கள் நடக்கும். சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெல்லி செல்லும் ரெயிலை மறித்து போராட்டம் செய்யப்படும். தமிழகத்தின் எதிர்காலத்துக்காக நடத்தப்படும் என்பதால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும்.

மருத்துவமனையில் உள்ள முதல்-அமைச்சர் பற்றி மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்வது எல்லாம் கருத்து சுதந்திரம் ஆகாது.

0 comments:

Post a Comment